கோவர்த்தன பூஜை

 கோவர்த்தன  பூஜை


விருந்தாவன வாசிகள் இந்திரனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு யாகத்தை நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். இந்திரனைத் திருப்திப் படுத்தினால் மழை வருமென்று நம்பப்பட்டது. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட கிருஷ்ணர், தன் தந்தை நந்தமகாராஜாவிடம் அதுபற்றிப் பணிவுடன் கேட்டார். நந்தமகாராஜா சிறிது நேரம் மௌனமாக இருந்தார். யாகத்தின் நுணக்கங்களைச் சிறுவனான கிருஷ்ணரால் புரிந்துகொள்ள முடியாதென்று அவர் நினைத்தார். ஆனால் கிருஷ்ணர் விடவில்லை. அந்த விபரங்களை விரிவாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு நந்தமகாராஜா கூறினார்: 

"இச்சடங்கு பரம்பரை  பரம்பரையாகச் செய்யப்பட்டு வருகிறது. மழை இந்திரனின் கருணையால் ஏற்படுவதாலும், மேகங்கள் அவரது பிரதிநிதிகள் ஆகையினாலும், தண்ணீர் நமது வாழ்வுக்கு மிக முக்கியமானதாலும், மழையில்லாமல் நாம் பயிரிடவோ, தானியங்களை விளைவிக்கவோ இயலாது. மழை பெய்யாவிட்டால் நாம் வாழ முடியாது. எனவேதான், இந்த யாகம் செய்யப்படுகிறது", என்று நந்தமகாராஜா கூறினார். இதைக் கேட்டபின் கிருஷ்ணர் பேசிய விதம் இந்திரனை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியது. யாகத்தை நடத்த வேண்டாமென கிருஷ்ணர் விவாதித்தார். அதற்காக அவர் கூறிய காரணங்கள் இரண்டு. முதலாவதாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது போல், இவ்வுலக நலன்களுக்காக தேவர்களை வழிபடத் தேவையில்லை. தேவர்களை வழிபட்டுப் பெறப்படும் நன்மைகள் தற்காலிகமானவை. இரண்டாவதாக, தேவர்களை வழிபடுவதால் கிடைக்கும்
தற்காலிகமான நன்மைகளும் முழுமுதற்கடவுளால் வழங்கப்படுபவை. அவரின் அனுமதியின்றி யாரும் யாருக்கும் எந்த நன்மையும் வழங்க இயலாது. கிருஷ்ணர் மேலும் கூறினார்: 

"சுவர்க்க லோகத்தின் ஆளுனர் பதவியில் இருப்பதால் கர்வம் கொண்டிருந்த இந்திரனுக்கு பாடம் கற்பிப்பதற்காக, இந்திரனுக்கு செய்யும் யாகத்தை நிறுத்தி, கோவர்த்தன கிரிக்கான பூஜையை மேற்கொள்ள வேண்டும். நாம் விருந்தாவனத்தில் வாழ்வதில் திருப்தி காண்கிறோம். நமது உறவு குறிப்பாக கோவர்த்தன கிரியுடனும் விருந்தாவனத்துடனும் ஏற்பட்டது. நமது ஊரிலுள்ள
பிராமணர்களையும் கோவர்த்தன கிரியையும் திருப்திப் படுத்துவதற்கான யாகத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்". எனப் பணிவாகக் கேட்டுக் கொண்டார். இறுதியில் நந்தமகாராஜா கிருஷ்ணரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு
யாகத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்தார். அன்று முதல் இன்றுவரை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கோவர்த்தன பூசை நடத்தப்பட்டு வருகிறது. நந்தமகாராஜாவும் ஏனைய ஆயர்களும் கோவர்த்தன பூசையை நிறைவேற்றி, மலையை வலம் வந்தார்கள். கிருஷ்ணரின் ஆலோசனைப்படி கற்றறிந்த அந்தணர்களை வரவழைத்து வேதம்  ஓதச் செய்து, கோவர்த்தன பூசையை நடத்திப் பிரசாதம் வழங்கினார்கள்.விருந்தாவன வாசிகள் ஒன்றுகூடி, பசுக்களை அலங்கரித்து, அவற்றிற்குப் புல் கொடுத்தார்கள். பசுக்களுடன் கோவர்த்தன கிரியை வலம் வந்தார்கள். கோவர்த்தன பூசையை நடத்தி வைத்த அந்தணர்கள், கோபாலர்களையும், கோபியரையும் ஆசிர்வதித்தார்கள். எல்லாம் சரிவர நடந்தேறிய பின், கிருஷ்ணர் மிகப் பிரமாண்டமான உருவத்தை மேற்கொண்டு, கோவர்த்தன கிரிக்கும் தமக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை, இரண்டும் ஒன்றே, என்பதை அங்கிருந்த மக்களுக்கு உணர்த்தினார். அம்மலையின் கற்களை எடுத்துச் சென்று வீடுகளில் வைத்து கிருஷ்ணராக அவற்றைப் பூஜிக்கிறார்கள். இவ்வாறு கோவர்த்தன பூசையை நடத்திய விருந்தாவன வாசிகள், வசுதேவர் மைந்தனான கிருஷ்ணரின் கட்டளைகளை நிறைவேற்றிய பின் தத்தம்  வீடுகளுக்குத் திரும்பினார்கள். விருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தைக் கிருஷ்ணர் தடுத்து விட்டார் என்று அறிந்தபோது இந்திரன் மிகுந்த கோபம் கொண்டு, தன் கோபத்தை விருந்தாவன வாசிகளின் மீது காட்டினான். யாகம் நிறுத்தப்பட்டதற்கு கிருஷ்ணரே காரணம் என்பதை அறிந்திருந்த போதிலும், பழியை நந்தமகாராஜாவின் தலைமையிலான ஆயர்களின் மீது தீர்க்க முற்பட்டான். பலவகையான மேகங்களின் அதிபதியான இந்திரன், ஸாங்வர்த்தக என்ற மேகத்தை அழைத்தான். இந்த மேகம் பிரபஞ்சம் முழுவதையும் அழிப்பதற்கான தேவை ஏற்படும் போதுதான் அழைக்கப்படும். விருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கும் படி இந்திரன் ஸாங்வர்த்தக மேகத்துக்கு கட்டளையிட்டபோது அப்பொறுப்பை ஏற்க அவை மிகவும் அஞ்சின. ஆனால்
தேவேந்திரன், நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள் நானும் பெரும் புயல்கள் சூழ உங்களுடன் வருகிறேன். விருந்தாவன வாசிகளைத் தண்டிப்பதில் என் சக்தி முழுவதையும் செலவிடத் தீர்மானித்திருக்கிறே­ன். என்று உறுதியளித்து மேகங்களை ஊக்குவித்தான். இந்திரனின் கட்டளைப்படி பலவகையான,
மிகவும் அபாயகரமான மேகங்கள் விருந்தாவனத்தின் மேல் தோன்றி தம் பலம் முழுவதையும் பிரயோகித்து இடைவிடாது மழையைப் பொழிந்தன. தொடர்ந்து இடியிடித்தது. மின்னல் மின்னியது, பலமான காற்று வீசிற்று. சற்று
நேரத்தில் விருந்தாவனத்தின் நிலப் பகுதிகள், மேடு பள்ளம் தெரியாத வண்ணம் நீரால் நிரம்பின. நிலமை மிக மோசமாயிற்று. குறிப்பாக மிருகங்கள் பெருத்த அவதிக்குள்ளாயின. மழையோடு கடும் காற்று வீசியதால் விருந்தாவனத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் குளிரில் நடுங்கின. அத் தொல்லைகளில் இருந்து விடுபட முடியாத மக்கள் கோவிந்தனின் பாத கமலங்களில் சரணடைந்தனர். கிருஷ்ணர், காலம் தவறிப் பெரும் மழை பெய்ததும், கடும் காற்று வீசியதும் தனக்குச் சேரவேண்டிய யாகம் நடைபெறாததால் கோபம் கொண்ட இந்திரனின் செயலால் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டார். இந்த தேவன் தானே மிகப் பெரியவன் என்று எண்ணிக்கொண்டு தன் பலத்தைக் காட்டுகிறான். ஆகையால் என் தகுதியை நான் அவனுக்கு உணர்த்த வேண்டும். என் தூய பக்தர்களை நான் காப்பாற்ற வேண்டும். எனக் கிருஷ்ணர் நினைத்தார். பின்பு பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஒரு குழந்தை தரையில் இருந்து குடைக் காளானைப் பிடுங்குவதுபோல், கோவர்த்தன கிரியைத் தன் ஒரு கையில் தூக்கிக் கொண்டார். மலையைக் கையில் ஏந்தியவாறு தம் பக்தர்களிடம் கிருஷ்ணர் கூறினார்:
 

எனதருமை விருந்தாவன வாசிகளே, இப்போது நீங்கள் பத்திரமாக இந்த கோவர்த்தன கிரியாகிய குடையின் கீழ் வரலாம். என் கையிலிருந்து மலை
நழுவி விழுந்து விடலாமென்று நீங்கள் அஞ்ச வேண்டாம். பலத்த மழையாலும் சூறாவளிக் காற்றாலும் நீங்கள் பெருத்த அவதிக்குள்ளாகி இருக்கிறீர்கள். எனவே நான் இந்த மலையைத் தூக்கி அதை உங்களுக்காக குடையாகப் பிடித்திருக்கிறேன். இந்தக் குடையின் கீழ் உங்களின் பசுக்களுடன் இப்போது நின்மதியாக இருங்கள். என்று கிருஷ்ணர் கூறியதும் விருந்தாவன வாசிகள் அப்பெரிய மலையினடியில் ஒன்று கூடி, தங்கள் உடைமைகளுடனும் மிருகங்களுடனும் பத்திரமாக இருந்தார்கள். அப்போது
கிருஷ்ணருக்கு ஏழு வயதே நிரம்பியிருந்தது.

கிருஷ்ணரின் அசாதாரணமானயோக சக்தியைக் கண்டு சுவர்க்கத்தின் அதிபதியான இந்திரன், திகைப்படைந்தான். உடனே, அவன் மேகங்களையெல்லாம் விலகிச் செல்லும்படி கட்டளையிட்டான். பிறகு சகஜ நிலை திரும்பியதும் மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு சென்றனர். கிருஷ்ணர் மெதுவாக கோவர்த்தன கிரியை கீழே இறக்கி வைத்தார். தேவர்கள் பூமியின் மீது மலர் மாரி பொழிந்தார்கள். இறுதியில் சுவர்க்க லோகத்தில் இருந்து தேவேந்திரன் வந்து, தான் இழைத்த குற்றத்தை உணர்ந்து, மன்னிப்பு கோரினான் இந்தினின் கர்வம் அடங்கியது. பின் கிருஷ்ணரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு இந்திரன் சுவர்க்க லோகத்திற்கு திரும்பிச் சென்றான்.

No comments

Powered by Blogger.