மஹாபாரதம்
மஹாபாரதம்
வேதங்கள் நான்கையும் தொகுத்து அவற்றை தன் சீடர்களுக்கு முதலில் போதித்தவர் பகவான் வேத வியாஸர் தான். அவருடைய சீடர்கள் தாங்கள் கற்றதை மக்களுக்குப் போதித்தனர். ஆயினும் தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளவைகளின் மையக்கருத்தையும், நோக்கத்தையும் மக்களில் பலரால் தெளிவாக புரிந்து கொள்ள இயலவில்லை என்பதைக் கண்ட வியாசமுனிவர் தன் சீடரான ஜைமினி முனியை வேதத்தில் கர்மங்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ள பாகத்திற்கு விளக்கம் எழுதுமாறு பணித்தார். மக்கள் கடைபிடிக்க வேண்டிய தர்மங்களை விரிவாக விளக்கும் இந்நூல் கர்ம மீமாம்ஸா அல்லது தர்ம மீமாம்ஸா என்று அழைக்கப்பட்டது. உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளவற்றிற்கு விரிவான விளக்கத்தை வேதவியாஸரே எழுதினார். அதற்கு பிரம்ம சூத்திரம் என்று பெயர். ஆயினும் போதிய பொறுமை, மன அமைதி, ஆர்வம் மற்றும் படித்தறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஆகியவை போதிய அளவுக்கு மக்களுக்கு இல்லாமையால், தான் எழுதிய பிரம்ம சூத்திரத்தையும் அவர்கள் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதைக் கண்ட வியாஸமுனிவர் உபநிட கருத்துகளுக்கு வேறு உருவம் கொடுத்தால், அவற்றை வேறுவிதமாகப் புகட்டினால் மக்கள் அவற்றை எளிதாக புரிந்து கொள்வார்கள் என்று எண்ணினார். அவருடைய இந்த எண்ணத்தில் உதித்தது தான் மஹாபாரதம் என்னும் இதிகாசம் அல்லது சரித்திர வரலாறு. வேதவியாஸரால் எழுதப்பட்ட இந்த இதிகாசம் எல்லா வயதினராலும் அனைத்து வகை மனிதர்களாலும், படித்தவர் மற்றுமின்றி படிப்பறிவில்லாத பாமர மக்களாலும் புரிந்து கொள்ளுமாறு எளியமுறையில் எழுதப்பட்டுள்ளது.
மஹாபாரதத்தின் ஆசிரியர் யார்?
மஹாபாரத நூலை எழுதியவர் யார் என்பதைப் பற்றி பலவிதமான கருத்துகள் உள்ளன. வேத வியாஸர் என்னும் ஒருவரைக் குறிக்கிறதா அல்லது அதே பெயரைக் கொண்ட பலரைக் குறிக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மஹாபாரத்தில் காணப்படும் 1,00,000 பாடல்களும் ஒரு காலகட்டத்திலேயே எழுதப்பட்டவையா அல்லது அவற்றில் சில பிற்காலத்தில் தோன்றிய ஆசிரியர்களால் இயற்றப்பட்டு சேர்க்கப்பட்டனவா என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது. வியாஸர் முதல் 40,000 பாடல்களை மட்டுமே இயற்றினார் என்றும், இப்பாடல்கள் அடங்கிய புத்தகத்திற்கு ஜெய என்று பெயர் என்பது சில அறிஞர்களின் கருத்து. பிறகு வேறு சில ஆசிரியர்கள் மேலும் சிலகதைகளை அவற்றுடன் சேர்த்தனர் என்றும், அப்பொழுது அந்நூலுக்கு பாரத என்ற பெயர் சூட்டப்பட்டது என்றும், பிற்காலத்தில் மேலும் சில கதைகள் சேர்க்கப்பட்ட பின் அந்த முழு நூலுக்கு மஹாபாரதம் என்ற பெயர் அமைந்தது என்றும் இந்த அறிஞர்கள் கூறுகின்றனர். இத்தகைய மாறுபட்ட கருத்துகள் நிலவினாலும் நம்மைப் பொறுத்தமட்டில் வேதவியாஸர் என்பவர் ஒரு மனிதர் தான். அவர் ஒருவரே மஹாபாரதத்தை இயற்றினார். ஒரு லட்சம் பாடல்களைக் கொண்ட இந்நூல் தான் இன்று உலகிலேயே மிகப் பெரிய இதிகாசமாகும். இது ஒரு அறிவுக்களஞ்சியம்.
மஹாபாரதம் எவ்வாறு எழுதப்பட்டது என்பதைப் பற்றி மிகவும் பிரபலமான, கவனத்தை ஈர்க்கும் கதை ஒன்று அந்த இதிகாசகாலத்திலேயே காணப்படுகிறது. ஆனால் அதைப் படிப்பவர்களில் பலர் அக்கதையில் உள்ள முக்கிய கருத்தை புரிந்து கொள்ள தவறுகிறார்கள். மஹாபாரதத்தின் கதை வேதவியாஸரின் மனதில் உருவான பொழுது, அது ஒரு மிகப் பெரிய நூலாக உருவாகும் என்பதையும், தம்மிடமிருந்து அந்நூல் பாடல்களாக வெளிப்படும் பொழுது அவற்றை சுருக்கெழுத்தில் எழுத வல்லவர் ஒருவர் தனக்குத் தேவை என்பதையும் அவர் உணர்ந்தார். இதைப்பற்றி அவர் சிந்தித்துக் கொண்டிருக்கையில் பகவான் பிரம்மா அவர் முன் தோன்றி ஞானத்தின் உறைவிடமான பகவான் கணேசர் தான் அதற்கு ஏற்றவர் என்றும், ஆகவே அவரை துதித்து வழிபடுமாறு கூறி மறைந்தார். அவ்வாறே வேதவியாஸரும் பகவான் கணேசரை துதிக்க, பகவானும் வியாஸர் முன் தோன்றினார். தான் கூறும் பாடல்களை பகவான் கணேசர் எழுதித்தர வேண்டுமென்று வியாஸர் வேண்டியதற்கு பகவான் கணேசர் நான் அதற்குத் தயாராக இருக்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை, நான் எழுத ஆரம்பித்து விட்டால் நீங்கள் சொல்வதை நிறுத்தவே கூடாது. என்றார். அதாவது வியாஸரது சொற்பொழிவு இடைவிடாத ஒன்றாக இருத்தல் வேண்டும்!
இந்நாட்களில் இவ்வாறு செய்வது எத்துணை கடினமான ஒன்று என்பதை நாம் நன்கு அறிவோம்! ஏனெனில் ஒரே ஒரு கடிதத்தைத் தயார் செய்வதற்குள்ளேயே அதிகாரிகள் தங்களுடைய காரியதரிசிகளிடம் பல தடவை சற்று நிறுத்துங்கள்! நீங்கள் எழுதியுள்ளதை ஒருமுறை படியுங்கள். நான் இதுவரை என்ன கூறினேன்? என்று கூற வேண்டியுள்ளது. வேதவியாஸரும் இது மிகவும் கடினமான ஒன்று என்பதை உணர்ந்தார். எனினும் தனக்குக் கிடைத்த அச்சந்தர்ப்பத்தை நழுவ விட அவர் விரும்பவில்லை. ஆகவே அவர் கணேசரைப் பார்த்து நல்லது ஆனால் நானும் ஒரு நிபந்தனையை விதிக்க விரும்புகிறேன். நான் சொல்வதின் முழுப் பொருளையும் நன்றாக புரிந்து கொள்ளாமல் நீங்கள் எழுதக்கூடாது என்றார். இவ்வுரையாடல் மஹாபாரதக்கதையில் பொதிந்துள்ள கருத்துகளும், தத்துவங்களும் எத்துணை ஆழமானவை, எத்துணை உன்னதமானவை, கிடைத்தற்கரியவை, முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை விளக்குகிறது. ஒருவருக்கொருவர் கூறிய நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளபட்டன. வியாஸபகவானும் மஹாபாரதக் பாடல்களை கூறத்தொடங்கினார். ஆயினும் பாடல்களை இயற்றும் பொழுது இடையிடையே சிந்திப்பதற்கு வியாஸ பகவானுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. ஆகவே அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர் எளிதில் விளங்காத கடினமான பொருள் கொண்ட பாடல் ஒன்றை கூறுவார். அப்பாடலின் கருத்தை புரிந்து கொள்வதற்கு பகவான் கணேசருக்கும் சிறிது நேரம் தேவைப்பட்டது. இப்பாடலின் கருத்து என்ன? என்று அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் நேரத்தில் வியாஸர் அடுத்த பாடலை இயற்றி விடுவார்.
பகவான் கணேசராலும் எளிதில் புரிந்து கொள்ள இயலாத பாடல்கள் எவை என்பது நமக்கு தெரியாது. ஆனால் அத்தகைய பாடல்களின் எண்ணிக்கை 500 அல்லது 600 ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பாடல்களின் பொருளை வியாஸமுனிவரும், கணேசரும் மட்டுமே அறிவார்கள். நூலில் ஒரு குறிப்பிட்ட பகுதி ஒரு நதியை, ஒரு மலையை அல்லது ஒரு மரத்தைப் பற்றிய வர்ணனை போல் எளிதாகத் தோன்றலாம். ஆனால் அப்பாடலின் உட்கருத்து மேற்சொன்ன மேற்போக்கான ஒன்றாக இல்லாமல் மிக ஆழ்ந்த பொருள் கொண்டதாக இருக்கும். ஆகவே ஒவ்வொரு பாடலையும் கருத்துடன், ஆழ்ந்து படிக்க வேண்டும். எதையும் மேற்போக்காக படிக்கக்கூடாது. இதுதான் மேற்சொன்ன கதையின் கருத்து. மஹாபாரதம், அறிவியல், கலைகள், வணிகவியல், பொருளாதாரவியல், அரசியல், போர்முறைகள், சமூகவியல், வரலாறு, புராணக் கதைகள், தர்மசாத்திரங்கள் மற்றும் அத்யாத்ம சாத்திரம் எனப்படும் ஆத்ம ஞானம் ஆகிய அனைத்தையும் தன்னுள் அடக்கியுள்ளது. உலகளாவிய புகழ்வாய்ந்த பகவத்கீதை மஹாபாரதத்தில் காணப்படுகிறது. மஹாபாரதத்தில் என்ன இருக்கிறது? என்று யாரேனும் கேட்டால், அதில் இல்லாதது எது? என்பது தான் நமது விடையாக இருக்கும்.
வேத வியாஸரோ மஹாபாரதத்தில் உள்ளது தான் இவ்வுலகத்திலும் உள்ளது. அதில் காணப்படாதவை இவ்வுலகிலும் காணப்படாதவைதான் என்று கூறியுள்ளார். இதை ஒரு துணிச்சலான, அகங்காரம் நிறைந்த கூற்றாக நீங்கள் எண்ணலாம். ஆனால் உண்மையில் இது அத்தகையதல்ல. மஹாபாரதத்தை ஊன்றிப் படித்தீர்களானால் வேத வியாஸரின் கூற்று முற்றிலும் உண்மையானது என்று புரிந்து கொள்வீர்கள். இவ்வுலகமே, வேத வியாஸரினால் மிச்சமாக விடப்பட்ட ஒன்று தான் என்றும் கூறப்பட்டுள்ளது. வியாஸோச்சிஷ்டம் ஜகத் ஸர்வம். உச்சிஷ்டம் என்றால் மீதமாக உள்ள ஒன்று என்று பொருள். உண்ணுகையில் நமக்கு வேண்டியதை மட்டும் உண்டு விட்டு மற்றவைகளை மிச்சமாக வைப்பதற்கு ஒப்பாகும் இது. மேற்சொன்ன கூற்றின் பொருள் இதுதான். அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் வேதவியாஸர் ருசி பார்த்து விட்டார் அதாவது ஒரு மனிதன் அறிய வேண்டிய அனைத்தையும் மஹாபாரதத்தில் வேதவியாஸர் விளக்கிவிட்டார். ஆகவே அவருக்குப் பிறகு எந்த ஒரு பொருளைப் பற்றியும் எவர் எழுதினாலும் அவர் உண்மையில் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ வியாஸர் எழுதிய மஹாபாரதத்திலிருந்து தான் எழுதுவதற்குத் தேவையான பொருளை அவர் கடனாகப் பெறுகிறார்!
மஹாபாரதத்தின் மையக் கருத்து
இம்மாபெரும் இதிகாசத்துடன் பதினெட்டு என்ற எண் பல வகைகளில் தொடர்பு கொண்டுள்ளது கவனத்தை ஈர்க்கும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும். மஹாபாரதத்தின் 1,00,000 பாடல்கள் பதினெட்டு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நடந்த போர் பதினெட்டு நாட்கள் நீடித்தது. மஹாபாரதத்தின் நடுவில் வரும் பகவத்கீதை பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டது, மேலும் வியாஸர் எழுதிய புராணங்களின் எண்ணிக்கையும் பதினெட்டாகும். பதினெட்டு என்ற இந்த எண்ணின் முக்கியத்துவம் என்ன? ஹிந்துக்களின் மரபுப்படி என்ற எண் வெற்றியைக் குறிக்கிறது. இதன் காரணமாகத் தான் மஹாபாரதம் முதலில் ஜெய (வெற்றி) என்று அழைக்கப்பட்டது. மஹாபாரதத்தில் முக்கியமாகக் கூறப்படுவது வேதங்களில் காணப்படுபவை தான் என்றாலும், நடைமுறை நோக்கில் பார்த்தால் மனதில் எழும் கீழ்த்தரமான எண்ணங்களை வெற்றி கொள்வது எவ்வாறு என்பதை சித்திரிக்கும் ஒரு கதையாக அது விளங்குவதைக் காணலாம்.
நம் ஒவ்வொருவரின் மனதிலும் ஒளி வீசித்திகழும் ஆன்மிக இயல்புதான் நமது உயர்ந்த உண்மையான ஆன்மிக நிலை. தீய குணங்களும், தீய எண்ணங்களும் நம்முள்ளே இருக்கும் கீழ்மையான இயல்பை காட்டுகின்றன. இத்தகைய தீய எண்ணங்களை மனதிலிருந்து அறவே அகற்றுவது தான் மஹாபாரதம் எழுதப்பட்டதின் முக்கிய நோக்கமாகும். அதுதான் உண்மை, மற்றும் தர்மத்தின் வெற்றியாகும். மஹாபாரதத்தில் வரும் பல பாத்திரங்கள் போரில் பாண்டவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று பல தடவை கூறுகின்றனர். இதற்குக் காரணம் என்ன? எங்கு தர்மம் நிலைத்திருக்கிறதோ, அங்கு வெற்றி நிச்சயம் என்று கூறப்பட்டுள்ளது தான் இதற்குக் காரணம். பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் பாண்டவர்களிடம் தான் அவர்களுக்கு துணையாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் தனக்கு உறவினர்களாக இருப்பதாலோ, அல்லது தான் அவர்களை அதிகமாக நேசிப்பதாலோ அல்ல என்றும், அவர்கள் தர்மத்தின் பாதையில் செல்லுகின்ற ஒரே காரணத்தினால் தான் என்று பலமுறை கூறுகிறார். எங்கு தர்மம் இருக்கிறதோ, அங்கு இறைவனும் இருப்பான். எங்கு இறைவன் இருக்கிறானோ அங்கு வெற்றி நிச்சயம். இதனால் தான் பகவத்கீதையின் கடைசி பாடலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் வில்லாளியான அர்ஜுனன், யோகத்தின் தலைவனான பகவான் ஸ்ரீகிருஷ்ணனுடன் சேர்ந்து இருக்கிறானோ அங்கெல்லம் வெற்றி, வளமை, தெய்வீகம், உயர்ந்த இயல்பு ஆகியவை விளங்கும். இதிலிருந்து நமக்கு அளிக்கப்படும் போதனை, தற்காலிகமானதாக இல்லாமல் நிரந்தரமான வெற்றி உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் பக்கம் இறைவன் இருக்க வேண்டும். இறைவன் உங்கள் பக்கம் இருக்க வேண்டுமாயின் நீங்கள் தர்மத்தின் வழியில் செல்ல வேண்டும். மனதில் தோன்றும் கீழ்த்தரமான, எதிர்மறை எண்ணங்களையும், இயல்புகளையும் வெற்றி கொள்வதன் மூலம் நாம் இந்த உண்மையான வெற்றியை அடைகிறோம். நம்முள்ளே இருக்கும் பகைவன் அழிக்கப்படுகிறான். என்றென்றும் நிலவும் வளமை நமக்குக் கிட்டுகிறது. புற உலகில் நடந்த மஹாபாரதப் போர் நம் மனதில் இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருக்கும் மனப் போராட்டங்களைத் தான் பிரதிபலிக்கிறது. மஹாபாரதப் போர உண்மையிலேயே நிகழ்ந்த ஒன்று அல்ல என்றும், அது நம்மனதில் நிகழும் போராட்டங்களின் உருவகம் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் மக்கள் மனதில் இத்தகைய போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தால், அது வெளிவுலகில் பிரதிபலிக்காது என்று நினைக்கிறீர்களா? மாறாக அதனுடைய வெளிப்பாட்டை தினமும் காண்கிறோம். கணவனுக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்குமாயின் அவர் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்ளவில்லையா? போர் என்பதை வெளி உலகில் மட்டும் தான் உள்ளது என்று நாம் கருதக்கூடாது. மனத்தளவில் நிலவும் போராட்டங்களும் வெளி உலகில் பிரதிபலிக்கின்றன. அவற்றின் பாதிப்பு குடும்பம், சமூகம் மற்றும் உலகம் ஆகிய அனைத்திலும் தெரியும்.
தர்மம் வெற்றி பெறும்
கவுரவர்கள், பாண்டவர்கள் ஆகியவர்களைப் பற்றிய இந்தக் கதை, நல்லவைக்கும், தீயவைக்கும் இடையில் நிகழும் போராட்டத்தையும், முடிவில் தர்மத்தின் பாதையில் நடப்பவர்கள் வெற்றி பெறுவதையும் கூறுகிறது. சில சமயங்களில் மக்களில் சிலர் நான் நாணயமாக வாழ சில காலம் முயற்சித்தேன், ஆனால் அதனால் எனக்கு எவ்வித பலனும் கிட்டவில்லை. ஆகவே அந்த முயற்சியை கைவிட்டு விட்டேன் என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன். இது ஒரு வேடிக்கையான கூற்று அல்லவா? நாணயம் என்பது ஒரு பதினைந்து நாட்களுக்காக மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும் பாடத்திட்டமல்லவே! காட்டில் வாழும் சிங்கம் மற்ற விலங்குகளைக் கொன்று தின்கிறது. புலால் உண்பது அதனுடைய தர்மம். ஆனால் கடுமையான பசியால் வாடினாலும் சிங்கம் போன்ற ஒரு விலங்குகூட தன் தர்மத்திலிருந்து நழுவுவது இல்லை. பார்த்தீர்களா! இவ்வாறே, சாது புருஷர்கள் அதாவது போற்றுதற்குரிய ஞானிகள் தங்களுக்கு மிகப் பெரும் துயரம் வரக்கூடிய வாய்ப்பு இருந்தாலும், மரணமே ஏற்படக் கூடிய அச்சுறுத்தலே இருந்தாலும், தர்மத்திற்கு புறம்பான செயலை புரிய அறவே மறுத்து விடுவார்கள். இவ்வாறே தர்மத்தைக் கடைபிடிப்பதில் நாமும் விட்டுக் கொடுக்காத மனப்பாங்குடன் இருந்தால் உண்மையான வெற்றி நமக்கே கிட்டும். இத்தகைய குணத்தினை பெற்றிருந்ததினால் தான் பாண்டவர்கள் போற்றப்பட்டனர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஏதோ சில பலவீனங்கள் இருந்தது உண்மையே. ஆயினும் அவர்கள் தங்களுடைய பலவீனங்களை ஒப்புக்கொண்டனர், அப்பலவீனங்களின் காரணமாக எழுந்த துன்பங்களை ஏற்கத் தயங்கவில்லை.
மன அழுத்தங்கள், அவற்றின் காரணமாக மனத்தளவிலும், உடலிலும் ஏற்படும் பாதிப்புகள், அளவுக்கு மீறிய போட்டி மனப்பான்மை, தரங்கெட்ட அரசியல் நாகரீகம், லஞ்ச லாவண்யங்கள், சமுதாய ஏற்றத் தாழ்வுகள் நிறைந்தது இன்றைய உலகம். இன்றைய நாகரீக உலகில் நாணயம், நேர்மை போன்ற நல்லியல்புகளினால் எதையும் சாதிக்க இயலாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் நாணயமற்ற தன்மையும், நேர்மையற்ற செயல்களும் வெற்றி பெறுகின்றனவா? நேர்மையற்றவர்களி டையேயும் உண்மை தான் வெல்கிறது என்று நான் கூறினால் அது உங்களுக்கு வியப்பான ஒன்றாகத் தெரியலாம்! உதாரணமாக கொள்ளைக்காரர்கள், தீவிரவாதிகள் ஆகியவர்களிடையேயும் கூட நாணயமும், நேர்மையும் நிலவுகிறது. ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்களுக்கிடையே மிகுந்த கட்டுப்பாடும், விசுவாசமும் நிலவும். தங்களுடைய குழுவில் விசுவாசமற்றவர் யாரேனும் இருந்தால் அவரை அவர்கள் கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள். தீய சக்திகள் கூட தங்களுக்குள் இருக்கும் கட்டுப்பாடு, விசுவாசம் போன்ற நல்லியல்புகளின் காரணமாகத்தான் பலம் பெறுகிறார்கள், வெற்றி பெறுகிறார்கள். தீய சக்திகள் வெற்றி பெறுவதற்குக் காரணம் அவைகளுக்கிடையே உள்ள ஒற்றுமைதான். ஆனால் இதற்கு மாறாக நல்லவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் இடையே இத்தகைய ஒற்றுமை மனப்பான்மை இல்லை, இதற்குக் காரணம் அவர்கள் ஒவ்வொருவரும் தன்னையே உயர்த்திக் காட்டிக் கொள்வதில் மட்டும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பது தான். ஆகையால் உண்மையில் அவர்களை நல்லவர்களாகக் கருத முடியாது.
சமீபத்தில் நான் படித்த ஒரு கட்டுரை இதனை தெளிவாக விளக்குகிறது. உண்மையிலேயே நல்ல சக்தியாக விளங்கும் ஒன்றிற்கும், தீய சக்தி ஒன்றிற்கும் போர் நடக்குமாயின் நல்ல சக்தியே வெற்றி பெறும் என்று அக்கட்டுரை ஆசிரியர் கூறுகிறார். ஆனால் பொதுவாக நாம் காண்பது தீய சக்திக்கும், அதைவிட சிறிதளவே மேன்மையான மற்றொரு தீய சக்திக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான். ஆயினும் சற்றே மேன்மை படைத்த அந்த தீய சக்தியையும் நாம் நல்ல சக்தி என்று அழைக்கிறோம். உதாரணமாக&नबस्प; நான் மற்றொருவரைப் பற்றி கூறும்பொழுது அம்மனிதர் இலட்சக்கணக்கான டாலர் பணத்தை அபகரித்துக்கொண்டார், ஆனால் நான் சில ஆயிரம் டாலர்களைத் தான் அபகரித்துக் கொண்டேன் என்று கூறுவேனாகில், அதற்கு அர்த்தம் நான் நல்லவன் என்பதல்ல! நான் குறிப்பிட்ட மனிதரை விட ஓரளவுக்குத் தான் நல்லவன்! ஒரு சமயம் ஒருவர் என்னிடம் ஸ்வாமிஜி, சமூகம் அனைத்துமே ஊழல் நிறைந்ததாக உள்ளது, அனைவரும் லஞ்சம் வாங்குகிறார்கள். ஆனால் என் வாழ்க்கையில் நான் ஒருமுறை கூட லஞ்சம் பெற்றதில்லை என்று கூறினார். அதற்கு நான் அப்படியென்றால் உண்மையிலேயே நீங்கள் ஒரு அற்புதமான மனிதர்தான். அந்த சபலத்தை எவ்வாறு நீங்கள் வென்றீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர் ஏனெனில் எவரும் எனக்கு லஞ்சம் அளிக்க முன் வரவில்லை என்றார்.
பிறர் ஆசை காட்டவில்லை என்பதாலோ அல்லது லஞ்சம் கொடுக்க முன் வரவில்லை என்பதாலோ ஒருவர் சீரழியாமல் இருக்கிறார் எனின் அவர் உண்மையிலேயே நல்ல மனிதர் என்று நாம் கூற முடியாது. நல்லவர் என்று நாம் அழைக்கும் மனிதர் தீயவரிடம் தோற்றுப் போனதை காண்கிறோம். நல்லவர் என்று நாம் கருதுபவர் உண்மையிலேயே முழுமையான நல்லவராக இல்லாமல் இருப்பது தான் இதற்குக் காரணம். அத்தகையவர்களின் நற்குணங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்தவர்களாக இருப்பதில்லை, அவர்களிடம் நற்குணங்களுடன் அத்துணை மேன்மையாகக் கருதமுடியாத மற்ற குணங்களும் கலந்தே காணப்படுகின்றன. நேர்மையற்ற வழிகளில் செல்வத்தை சம்பாதிக்கும் சிலர் உள்ளனர். நேர்மையாக இருப்பதால் பலன் ஒன்றும் இல்லை என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால் இதே மனிதர்கள் தங்களுடைய கணக்கரோ அல்லது பொருளாளரோ மிக நாணயமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தங்களுடைய வேலையாட்கள் தங்களிடம் விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதிலிருந்து நாணயத்தையும், உண்மை பேசுதலையும் தான் நாணயமற்ற மனிதர்கள் கூட மதிக்கிறார்கள் என்பது விளங்கும்.
ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் உலகம் மேற்சொன்ன நற்பண்புகளை என்றும் மதிக்கிறது. ஆனால் நாம் ஒவ்வொருவரும் இத்தகைய நற்பண்புகளை பிறரிடம் தான் எதிர்பார்க்கிறோமேயன்றி அவை நம்மிடம் காணப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. நாம் எவ்வாறு இருக்கிறோமோ அவ்வாறே பிறர் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம், ஆனால் அதே சமயம் மற்றவர்கள் எவ்வாறு இருக்கிறார்களோ அவ்வாறே அவர்களை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருப்பதில்லை. அது தான் பிரச்சினை. மஹாபாரதத்தில், நளன்-தமயந்தி, துஷ்யந்தன் - சகுந்தலை, யயாதி-தேவயானி போன்ற கிளை கதைகள் (உபகதைகள்) பல உள்ளன. இக்கதைகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிக்கோள் உண்டு. ஆயினும் முக்கிய கதையான மஹாபாரதம் தீயகுணங்கள் படைத்த நூறு கவுரவ சகோதரர்களுக்கும், உயர்ந்த பண்புகளையுடைய ஐந்து சகோதரர்களைக் கொண்ட பாண்டவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை சித்தரிப்பதாகத்தான் உள்ளது. கவுரவர்கள் நேர்மையற்ற தன்மை, எதிர்மறையான இயல்புகள் இவற்றின் சின்னமாக உள்ளவர்கள், பாண்டவர்களோ நேர்மைக்கும், உயர்ந்த பண்புகளுக்கும் அடையாளமாக உள்ளனர்.
நல்லவைக்கும் தீயவைக்கும் இடையே நடக்கும் இந்த போராட்டம் யுகம், யுகமாக தனிமனிதரின் மனதிலும், வெளி உலகிலும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. சில சமயங்கள் தீயவை தான் நல்லவைகளை விட அதிகம் வெற்றி பெறுவதாக நமக்குத் தோன்றுகிறது. பல சந்தர்ப்பங்களில் நம்முடைய தெய்வீகமான, உயர்ந்த எண்ணங்கள் நம்முடைய சபலங்களையும், இழிவான செயல்களையும் வெற்றிக் கொள்கின்றன. ஆயினும் இந்த வெற்றி நிரந்தரமானதாக இருப்பதில்லை. நம்முடைய கீழ்த்தரமான இயல்புகளுக்கு நாம் ஆட்படுகிறோம். இதற்குக் காரணம் என்ன? நல்ல சக்திகள் தங்களுடைய சக்தியை மட்டும் நம்பி தீயவற்றுடன் போரிட்டால் இத்தகைய நிலையற்ற வெற்றி, தோல்விகளும், லாபங்களும், நஷ்டங்களும் மாறி மாறி வருவதை தடுக்க முடியாது. ஆனால் நல்ல சக்திகள் தங்கள் போராட்டத்திற்காக இறைவனுடைய துணையையும் நாடிப் பெற்றால் அப்பொழுது அவை பெறும் வெற்றி நிரந்தரமானதொன்றாக இருக்கும். அதனால் தான் பாண்டவர்கள் உன்னதமான ஆன்மிக ஞானத்தின் இருப்பிடமாக விளங்கும், படைப்பில் உள்ள அனைத்திற்கும் மூலகாரணமான அப்பேருண்மையின் உருவமாக விளங்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் துணையை நாடினர்.
ஆகையால் இந்த உண்மைக்கும், நம் சொந்த வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்ன? எனக்கு நல்ல பெயர் கிட்டும், என்னுடைய வியாபாரம் பெருகி அதனால் எனது வருவாயும் கூடும் என்ற ஒரே நோக்கத்துடன் நான் நாணயம், காலந்தாழ்ந்தாத சிறந்தசேவை ஆகியவற்றை கடைபிடிப்பேனாகில், நான் இந்த உயர்ந்த நெறிகளை தவறான காரணங்களுக்காக பயன்படுத்துகிறேன் என்று பொருள். ஏனெனில் பணம், பெயர், புகழ் அனைத்தையும் நாணயமற்ற வழிகள், வெளி வேடம் ஆகியவற்றின் மூலமாகவும் பெறமுடியும் என்பதை நான் கண்டுபிடிக்கும் பொழுது நான் கடைபிடிக்கும் நன்னெறிகள் நிலைத்து நிற்கா. இதே காரணத்திற்காகத் தான் இக்காலத்தில் மாணவர்கள் கல்வி திட்டத்தின் மேல் உள்ள மதிப்பையும், நம்பிக்கையையும் இழந்து வருகிறார்கள், ஏனெனில் இன்று, கல்வி நல்ல வேலையை தேடிக்கொள்ளவும், நிறைய பணம் சம்பாதிக்கவும் மட்டுமே பயன்படுகிறது. நன்னெறிகளை கடைபிடிப்பது இறைவனின் பொருட்டும், ஆன்மிக ஞானம் பெறும் பொருட்டுமே இருத்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் உண்மை நமக்கு துணை நிற்கும். அப்பொழுது மனதை நம்மால் முழுமையாக நிரந்தரமாக கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அவ்வாறு செய்யாவிடில் நம்முடைய நல்லியல்புகள் நிலைத்து நிற்கா.
பாண்டவர்களின் பெருமை
மஹாபாரதத்தில் மிகவும் உயர்ந்த குணமுள்ளவர்களாக, போற்றத்தக்கவர்களாக கருதப்படும் பாத்திரங்கள் பலர் உள்ளனர். ஆயினும் சில சந்தர்ப்பங்களில் அவர்களின் செயல்கள் நம்மால் நியாயப்படுத்த முடியாதவைகளாக, விசித்திரமானவைகளாக இருக்கின்றன. மனிதர்களிடையே நிகழும் போராட்டங்களை மனித மனதின் பலம், பலவீனங்களை ஒளிவு மறைவின்றி வெளிச்சம் போட்டு காட்டுகிறது மஹாபாரதம். மனித வாழ்க்கையை தத்ரூபமாக, அதன் அருவருக்கத்தக்க அம்சங்களை மறைக்க முயற்சிக் காமல் வேதவியாசர் நமக்கு சித்தரித்துள்ளார். இத்தகைய நேர்மையான படைப்புக்கு யதா வஸ்துஸ்திதி அதாவது உண்மை எதுவோ, அதை அவ்வாறே காட்டுதல் என்று பெயர். இக்கதையில் வரும் மிக மேன்மையான ஆண்கள், பெண்கள் இருவருக்குமே சில பலவீனங்களும், குணக் குறைபாடுகளும் உள்ளன. இப்பாத்திரங்களின் உயர்வை சித்திரிக்கும் பொழுது அவர்களின் பலவீனங்களை மறைப்பதற்கு வேதவியாஸர் முயலவில்லை. ஆயினும் அவர்களிடம் சில குறைகள் இருக்கின்றன என்ற காரணத்தால் அவர்களுடைய பெருந்தகைமை அழிந்து விட்டது என்று பொருளல்ல. தங்களுடைய தவறுகளை குறைபாடுகளை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா, அவற்றை வெற்றி கொள்ள முயற்சிக்கிறார்களா, தங்களுடைய தவறுகளுக்கான தண்டனையை அனுபவிக்க தயாராக இருக்கிறார்களா இவைதான் அவர்களைப் பெருமை நிறைந்தவர்களாக ஆக்குகின்றன.
பாகவதபுராணத்தில் பரீக்ஷித் மகாராஜா சினத்தில் அறிவிழந்து ஒரு தவற்றை செய்கிறான். ஒரு நாள் வேட்டையில் களைத்துப்போய், பசியும். தாகமும் வாட்டிய நிலையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த ஒரு முனிவரின் கழுத்தில் இறந்த பாம்பை போட்டு விடுகிறான். ஆனால் உடனே ஓ பகவானே! என்னை மன்னித்துவிடு என்று அவர் கதறவில்லை. அதற்குமாறாக பகவானே! நான் மிகவும் வெறுக்கத்தக்க குற்றத்தைச் செய்து விட்டேன். ஆகையால், இறைவனே இத்தகைய குற்றத்தை நான் திரும்பவும் செய்யாத வகையில் எனக்கு தகுந்த தண்டனையை அளித்து விடு என்று வேண்டுகிறான். பரீக்ஷித் ராஜாவின் பெருமையும், உயர்வும் இதுதான். ஆனால் நாமோ ஏதாவது தவறு செய்துவிட்ட பிறகு ஓ! பகவானே! என்னை தயவு செய்து மன்னித்து விடு என்று கூறுவோம்.
பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரருக்கு சூதாட்டத்தில் மிக்க விருப்பம் இருந்தது. இது அவருடைய பலவீனமாக இருந்தது. கவுரவர்களுடன் அவர் ஈடுபட்ட அந்த கேவலமான சூதாட்டம் அவரால் வலிய ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல. ஆனால் அக்கால விதிப்படி உங்களை ஒருவர் போர்க்களத்திலோ அல்லது விளையாட்டிலோ சவாலுக்கு அழைத்தால் அச்சவாலை நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். ஆயினும் அந்த சூதாட்டத்தின் பொழுது எல்லைமீறி தான் சென்றுவிட்டதை உணர்ந்த யுதிஷ்டிரர் தன் தவற்றை புரிந்து கொண்டார். ஆகவே அவர் தன் சகோதரர்களிடம் அந்த தவற்றிற்கான தண்டனையை தானும். அவர்களும் அனுபவித்துத் தான் ஆகவேண்டும் என்று கூறினார். அவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகள் வனத்தில் வாழ வேண்டியிருந்தது. ஒரு வருடம் யாரும் அறியாதவாறு மறைந்து வாழ வேண்டியிருந்தது. அந்த பதிமூன்று ஆண்டுகளில் எப்பொழுது வேண்டுமென்றாலும் அவர்கள் கவுரவர்களை தாக்கி வெற்றி பெற்றிருக்கலாம். பீமனும், அர்ஜுனனும் பொறுமை இழந்து நாம் ஏன் அவர்களுடன் சண்டையிடக் கூடாது? என்று பலதடவை வினவினார்கள். ஆனால் அச்சமயங்களில் யுதிஷ்டிரர் அவர்களிடம் அது முறையல்ல! நாம் தவறு செய்து விட்டோம். அவர்கள் விதித்த சவாலை ஏற்றுக் கொண்டோம். அதில் தோற்றுவிட்டோம் ஆகவே நாம் துன்பப்பட்டேயாக வேண்டும். வனவாசம் முடிந்த பிறகு நமக்கு நியாயமாக சேர வேண்டிய பங்கை கேட்போம். நமக்குச் சேர வேண்டிய இராஜ்ஜியத்தை அவர்கள் திருப்பித்தராவிட்டால், அப்பொழுது அவர்களுடன் போருக்குப் போவோம் என்று பதில் கூறினார்.
Leave a Comment