சுவாரஸ்யமான பீமன் மற்றும் பகாசுரனின் கதை !!


சுவாரஸ்யமான பீமன் மற்றும் பகாசுரனின் கதை!!!

 

மகாபாரதம்  இதிகாசத்தில் பல கதைகள் மறைந்துள்ளன. அதன் உபகதை ஒன்றின் நாயகன் தான் பகாசுரன். இவன் ஏகசக்கரம் என்ற கிராமத்தை அடுத்த காட்டில் வசித்து வந்தான். இவர் மிகப்பெரிய அரக்கன். இந்த அரக்கனை அழித்தவர் பாண்டவர்களுள் ஒருவரான பீமன்.

இந்த கதைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது மிகவும் சுவாரஸ்யமான கதை.

இங்கு பீமன் எப்படி பகாசுரனை வதைத்தார் என்ற கதை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

 
பிராமண கிராமவாசியின் குடிசையில் தங்கிய பாண்டவர்கள் 




பாண்டவர்களும் அவர்களின் தாயான குந்தி தேவியும் அரக்கு மாளிகையில் இருந்து தப்பி, ஒரு இடத்தில் இருந்து மற்றொருக்கு இடத்திற்கு சென்று கொண்டிருந்த போது, ஏகசக்கரம் என்னும் ஒரு அமைதியான கிராமத்தை வந்தடைந்தனர். அங்கே அவர்களுக்கு கருணையுடன் அடைக்கலம் அளித்த ஒரு பிராமண கிராமவாசியின் குடிசையில் அவர்கள் தங்கினார்கள். அந்த பிராமணனுக்கு ஒரு மூத்த மகளும், ஒரு சிறிய மகனும் இருந்தனர். சில காலம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் கழிந்தது.

அழு குரலைக் கேட்ட குந்தி 



ஒரு நாள் பிராமணனின் வீட்டில் இருந்து அழுகுரல் ஒன்றை குந்தி தேவி கேட்டார். என்ன நடக்கிறது என்பதை பார்க்க வீட்டிற்குள் விரைந்தார். குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் உயிரை தியாகம் செய்ய தயாராக இருந்தனர். தான் இந்த குடும்பத்தின் தலைவன் என்பதால் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உள்ளதால், தான் உயிரை விடுவது தான் சரி என பிராமணன் கூறினார். ஆனால் குடும்பத்தின் நன்மைக்காக தான் உயிரை விடுவது தான் சரி என அவரின் மனைவி வாதாடி கொண்டிருந்தார். இவர்களை குறுக்கிட்ட அவர்களின் மகள், தான் உயிரை கொடுப்பது தான் சரி என கூறினால். அதேப்போல் அவரின் மகனும் தன் உயிரை கொடுக்க முன் வந்தான். இந்த உரையாடலுக்கு பின்னணியில் இருந்த காரணத்தை குந்தி தேவியால் புரிந்து கொள்ள முடியவில்லை. அமைதியாக உள்ளே வந்த அவர், நடந்ததை விளக்குமாறு பிராமணனிடம் கோரினார்.

பகாசுரனின் கதையை சொன்ன பிராமணன் 



பகாசுரனின் கதையை அவர் கூற ஆரம்பித்தார். அந்த ஊரின் அரசன் ஒரு அரக்கனிடம் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தார். அதன் படி, அந்த அரக்கனுக்கு அந்த கிராமத்தில் இருந்து ஒருவர் மூட்டைக்கணக்கான உணவை கொண்டு செல்ல வேண்டும். அந்த அரக்கன் அந்த உணவுடன் சேர்த்து அந்த கிராமவாசியையும் உண்டு விடுவான். இதே முறையில் பல கிராமவாசிகள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது, இந்த மாதத்திற்கு வந்துள்ளது அந்த பிராமண குடும்பத்தின் முறையாகும். அவர் குடும்பத்தில் இருந்து ஒருவர் அந்த அரக்கனுக்கு உணவை கொண்டு செல்ல வேண்டும். அப்படியே தன்னையும் அந்த அரக்கனுக்கு பலி கொடுக்க வேண்டும். இதனை கேட்ட குந்தி தேவி, "என் மகன் பீமன் உங்களுக்கு கண்டிப்பாக உதவிடுவான். உங்கள் மகனின் இடத்தில் அவன் செல்வான்." என கூறினார். 

அரக்கனுக்கு உணவைக் கொண்டு சென்ற பீமன்



 ஆனால் இதனை அந்த பிராமணனின் மனைவி ஒப்புக் கொள்ளவில்லை. "ஐயோ இல்லை! உங்கள் மகனை சாகடிக்க நான் சம்மதிக்க மாட்டேன். நீங்கள் எங்கள் விருந்தாளிகள்" என அவர் கூறினார். "பயம் கொள்ளாதீர்கள்! என் மகன் பீமா இதற்கு முன் பல அரக்கர்களை அழித்துள்ளான். அவன் பத்திரமாக மீண்டும் வருவான்" என குந்தி தேவி கூறினார். பாண்டவர்கள் வீடு திரும்பியவுடன், அந்த அரக்கனை பற்றியும், தான் அளித்த வாக்குறுதி பற்றியும் குந்தி தேவி கூறினார். பகாசுராவுக்கு உணவு எடுத்துச் செல்ல பீமன் ஒப்புக் கொண்டான். அரிசி, பால், காய்கறிகள், பழங்கள் மற்றும் இனிப்புகள் அடங்கிய வண்டியை தள்ளியபடியே பீமன் புறப்பட்டான்

உணவை காலி செய்த பீமன்



 காட்டை அடைந்த பீமனால் பகாசுராவை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்தான். வெகு விரைவிலேயே பசி எடுத்ததால் வாழைப்பழங்களை உண்ண ஆரம்பித்தான். சற்று நேரத்தில் அனைத்து வாழைப்பழங்களும் தீர்ந்தன. பின் சாதத்தையும், பின் பழங்களையும் இனிப்புகளையும் சாப்பிட்டான். அந்த அரக்கன் தோன்றிய போது, அனைத்து உணவுகளையும் பீமன் தீர்த்தே விட்டான். கடும் கோபத்தில் பார்த்த பகாசுரனுக்கு விசித்திரமான அலகு இருந்தது. வெறும் வண்டியை பார்த்த போது அவன் கடும் கோபத்தை அடைந்தான். பீமனை நோக்கி வேகமாக வந்த அவன், "என்ன தைரியம் உனக்கு" என கூச்சலிட்டான். " என் உணவை எப்படி நீ உண்ணலாம்? எனக்கு பசிக்கிறது." என கத்தினான்.

அரக்கனை அழித்த பீமன்



 "எனக்கும் பசித்தது. நீ தாமதமாக வந்து விட்டாய்" என பீமன் சிரித்து கொண்டே கூறினான். தன் பற்களை கடித்துக் கொண்டே பீமனை நோக்கி பாய்ந்தான் பகாசுரன். பீமனும் தயாராக இருந்தான். இருவருக்கும் பெரிய சண்டை மூண்டது. பெரிய மரங்களை பீமன் மீது தூக்கி எறிந்தான் பகாசுரன். ஆனால் அவற்றை பிடித்த பீமன், அவைகளை ஒரு சிறிய செடியை போல் வீசினான். நீண்ட நேரம் கழித்து, பகாசுரனை பீமன் கொன்றான். அவனை அந்த வண்டியுடன் இணைத்து ஒரு கயிற்றை கொண்டு கட்டினான். கிராமம் வரைக்கும் அவனை இழுத்து கொண்டே வந்தான். அந்த அரக்கன் இறந்து விட்டதை அந்த கிராமவாசிகளால் நம்ப முடியவில்லை. கண்ணீர் மல்க அவர்கள் பீமனுக்கு நன்றியை கூறினார்கள். அன்று இரவே அந்த கிராமமே கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது.

No comments

Powered by Blogger.