மாதா காந்தாரி
மாதா காந்தாரி
அன்பிற்குரிய தோழர்களே மற்றும் தோழிகளே, இன்று என்னுடைய எழுத்துக்கள் அனைத்தும் மஹாபாரத காலத்தில் வாழ்ந்த ஒரு கற்புக்கரசியை பற்றியதாகும்.
அவளை நினைக்கும்போது தோல் முடி நிமிர்ந்து நிற்கும். கற்புக்கரசி என்பதால் அந்த பரமாத்மாவும் அவளுக்கு அடிபணிந்து கைக்கூப்பினான். அற்புதமான மற்றும் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டான பெண்மணியுமாவாள். அந்த பெண்மைப்பூ மலர்ந்த இந்த பாசத்தின் கயிறுகளால் சூழப்பட்டிருக்கும் பாரதத்தில் பிறந்ததால் எந்த பெண்மையும் தன் கருங்குழலை சுழற்றி வீசும். அவள் முனிவர் வசிஷ்டரின் பத்தினி அருந்ததி மற்றும் அத்ரி முனிவரின் மனைவி அனசூயை ஆகிய கற்புக்கரசிகளுக்கு இணையுமாவாள். சிரிக்கும்போது அவளது பற்கள் பிச்சி பூவாகும். முகம் ரோஜா பூ இதழாகும். பாதம் செந்தாமரை மலராகும். உதடுகள் கோவம் பழங்களாகும். அவள் காதில் உள்ள தோடும் இசை பாடும். அவளின் கொலுசுகளை அவள் பாதங்கள் அழகூட்டுகின்றன.
வளைந்த இடை, குனிந்த தலை, அவளது சிரிப்பு நினைவூட்டும் பருவம் மழலை. நமது இந்திய புராணங்கள் எத்தனையோ பெண்டிரை கண்டிருக்கின்றது. ஒவ்வொரு வரலாற்று பெண்டிரும் புராணங்களின் வளம் குன்றாமல் ,அதற்கு செழுமை ஊட்டி, அதன் தலையை தூக்கி நிறுத்துகின்றனர். அந்த வகையில் நான் இப்போது கூறும் மங்கை அழகு நிறைந்த, அனைத்து. விதமான ஆயுதங்களையும் கையாளத் தெரிந்த, கற்புக்கரசி காந்தார குமாரி, மகா யோகினி, சுபலனின் கன்னிகை, திருதராஷ்டிரனின் பத்தினி, முதன் முதலாக புராணம் சந்தித்த தனித்துவமான பெண்மணி அவளே அருமை தாய் காந்தாரி ஆவாள். காந்தார நாட்டைச் சார்ந்தவள் என்பதால் காந்தாரி எனப்பட்டாள். பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடந்த இவள், தன் தமையன் சகுனியின் அன்பான தங்கையும் ஆவாள் .
தொடக்கத்தில் பீஷ்மர் காந்தாரியை திருதராஷ்டிரனுக்கு மணமுடிக்க கேட்ட பொது சுபலன் மறுத்தாலும், குரு வம்சத்தாரின் பெருமை மற்றும் ஒழுக்கத்தின் காரணமாக திருதராஷ்டிரனுக்கு காந்தாரியை அளித்தான். தனக்கு வரப்போகும் கணவன் விழி இல்லாதவர் என அவள் அறிந்ததும், அவன் மீது கொண்ட அன்பால் தன் கண்ணை கட்டிக்கொண்டு, தன் மூச்சுக்காற்று நிற்கும் வரை தவ வாழ்வு மேற்கொண்ட பத்தினி நெருப்பு இவள். வாழ்நாள் முழுவதும் தன் இல்லாளனுக்கு இணையான இல்லாளாக வாழ்ந்தாள். புற வாழ்க்கையின் வழிகாட்டியான விழியை மறைத்து இவள் கணவனுக்காக வாழ்ந்ததாலேயே, அதிகமான சக்தியும் கொண்டாள். நெற்றிக்கண்ணன் எம்பெருமான் சிவனின் தீவிர பக்தையும் ஆவாள். அவனிடமிருந்தே நூறு குழந்தைகளை பெரும் வரத்தை பெற்றாள். கூடவே சேர்ந்து ஒரு பெண் குழந்தையும் வேண்டும் என அவள் நினைத்தாள். கொண்ட பக்தியின் காரணமாக கடவுளிடம் கேட்காமலே துச்சலை என்னும் பெண் குழந்தையையும் பெற்றாள். இரு வருடங்கள் குழந்தையை சுமந்தாள். அவளுக்கு பின் கர்ப்பந்தரித்த குந்தி தர்மனை ஈன்றதால், பொறாமை கொண்டு தன் வயிற்றில் ஓங்கி அடித்தாள். வந்ததோ தசைப்பிண்டம். அனைத்தையும் ஞானக்கண்ணால் அறிந்த பகவான் வியாசர் அவளை தடுத்து அதை நூறு துண்டங்களாக எடுத்தார். ஒரு துண்டு மீந்தது. அதுவே அவள் நினைத்த பெண் குழந்தை துச்சலை .
குழந்தைகளை வளர்க்கும் இடத்தில் தான் காந்தாரி உண்மையிலேயே குருடி ஆனாள். குழந்தைகள் விரோத மனப்பான்மையோடு வளர்ந்தனர். துரியனுக்கு இறுதியாக தன் தவ வாழ்க்கையின் பலனைக் கொடுத்தாள். செய்வது பாதகம் என்ற போதிலும் கொடுப்பது தன் தனயனுக்கு அன்றோ . துரியன் ஆசி கேட்ட போது "யதோ தர்ம ததோ ஜெயா"என்றாள். இதன் அர்த்தம் எங்கு தர்மம் உள்ளதோ அந்த தரப்பு ஜெயிக்கும் என்பதாகும். கணவனுக்காக கண் கட்டிய அவள், தனக்கு பின் வரும் குழந்தைகளின் எதிர்கால கோரத்தை தடுக்க வில்லை. திருதராஷ்டிரனும் இந்த செயலை செய்யவில்லை. தான் கண் கட்டியது கணவனுக்காக எனும்போது அது தியாகம். அதுவே அவள் குழந்தைகளின் வாழ்க்கையில் கோர தாண்டவத்தையும் புரிந்துவிட்டது. ஒரு விதத்தில் அவள் கற்புக்கரசியாக போற்றப்பட்டாலும், பிள்ளைகள் இறந்த போது அவளது தவறான முடிவை உணர்ந்தாள். ஆனால் அவளுக்கு புரிதல் ஒரு குருக்ஷேத்திர போரினால் உணர்த்தப்பட்டது கொடுமை ஆகும். தாய்மை மனதோடு ஒரு ஆணும், பெண்ணும் யோசிக்கும் போது "சோகத்திலேயே மிக பெரிய சோகம் புத்திர சோகம் "ஆகும். புத்திர சோகத்தில் நாட்களை கடத்திய அவளிடம் யுதிஷ்டிரன் மன்னிப்பு கேட்ட போது, அவள் கீழே குனிந்து அழும் அத்தருணத்தில், அவள் கட்டிய துணியின் வழியாக சிறிதாக அவள் கண்ணில் தர்மனின் கால் பட்டு கறுத்தது. பிள்ளைகள் இறந்ததால் கொண்ட கோபமே காரணம் ஆகும். திடீரென்று யாரோ பின்புறம் இருந்து அணைப்பது போல் தோன்றியது. அவர் ஸ்ரீ கிருஷ்ணன் ஆவார். தன் தளிர்கள் சருகானதற்கு அவரே காரணம் என சாபம் அளித்தாள் வேடனால் கொல்லப்படுவான் என்றும், யது வம்சம் அழியும் என்றும், துவாரகை கடலில் மூல்கும் என்றும் சாபம் வழங்கினாள். ஆனால் இந்த சாபத்தை பரமாத்மா, அவளை கட்டியணைத்து கைக்கூப்பி ஏற்றுக்கொண்டார். இங்கே ராமாயணத்தின் ஒரு வினாவுக்கும் விடை வந்தது. கடைசியாக திருதராஷ்டிரன் மற்றும் குந்தியுடன் வனம் சென்று யோக நிலையில் அமர்ந்து காட்டுத்தீக்கு இரை ஆகி, வைகுண்டம் புகுந்தாள் மாதா காந்தாரி. பல இன்னல்களை மேற்கொண்ட அவள் குந்தியின் மேல் அதீத அன்பு கொண்டவள். தர்ம எண்ணம் கொண்ட இவளின் வாழ்க்கை நமக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இவள் வார்த்தையை மட்டும் அன்று துரியோதனாதிகள் கேட்டிருந்தால் ஒரு போர் தடுக்கப்பட்டிருக்கும் .
குறிப்பு - மாதா காந்தாரி "மதி" என்னும் ஒரு ஞான தேவதையின் அவதாரம் ஆவாள்.
Leave a Comment