கௌரவர்கள் மொத்தம் 101 பேர்!
கௌரவர்கள் மொத்தம் 101 பேர்!
தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை எனப் பாண்டவர்களின் நால்வகைப் படைகளும், அதுபோலவே கௌரவர்களின் நால்வகைப் படைகளும் அணிவகுத்து எதிரெதிராக நின்றிருந்தன. பெரும் வீரர்கள் கூட்டம், கையில் வாளோடும் வேலோடும் வில், கதாயுதம் முதலிய ஆயுதங்களோடும் போரிடத் தயாராய்த் துடிதுடிப்புடன் காத்திருந்தது. இதோ மிக விரைவில் யுத்தம் தொடங்கப் போகிறது. அந்த நேரத்தில், அர்ச்சுனன் தன் தேர்த்தட்டில் சாரதியாக வீற்றிருந்த ஸ்ரீகிருஷ்ணனைப் பணிவோடு, ஆனால், கூர்மையாகப் பார்த்து, பின் அடங்கிய குரலில் அழுத்தமாகக் கேட்டான்:
‘‘கண்ணா! இதோ யுத்தம் தொடங்கப் போகிறது. எனக்கு உன்னிடமிருந்து தெளிவான பதில் தேவை. சொல். துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் தானே உன் கொள்கை? தீயவர்களை அழித்து அடியவர்களைக் காப்பாற்றுவது! அப்படியானால் கௌரவர்கள் அத்தனை பேரும் அழிவார்கள் அல்லவா?’’ ‘‘அர்ச்சுனா! நீ சொன்னதில் ஒரு பாதி சரி. ஒரு பாதி தவறு. தீயவர்களை அழிப்பேன். ஆனால், கௌரவர்கள் அத்தனை பேரும் அழிவார்கள் என்று சொல்ல முடியாது. கௌரவர்களில் நல்லவர் யாரேனும் இருக்கலாம் அல்லவா?’’
‘‘கௌரவர்களில் நல்லவரா? பீஷ்மர், துரோணர் போன்ற நல்லவர்களெல்லாம் கூட, கௌரவர்களோடு அணி சேர்ந்ததால் அழியப் போகிறார்கள் என்கிறபோது, கௌரவர்களில் யாரேனும் ஒரு நல்லவன் இருந்தாலும் அவன் கௌரவர்களுடன் இருப்பதால் அழிய வேண்டியவன் தானே? நூறு கௌரவர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள்தானே கண்ணா?’’ கண்ணன் கலகலவென நகைத்தான். ‘‘நூறு கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பது சரியல்ல, அர்ச்சுனா! கௌரவர்களில் நூறுபேர் அழிக்கப்படுவார்கள் என்பதே சரி,’’ என்று புதிராக பதில் சொன்னான்.
‘‘நீ சொல்வது புரியவில்லை கண்ணா!’’ ‘‘பொறுத்திரு. புரியும்!’’ இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது, யுதிஷ்டிரர் யுத்த களத்தின் மையப் பகுதிக்கு வந்து நின்றார். ஏதோ அறிவிக்கும் நோக்கில் வந்திருக்கிறார் என்பதை அவர் நின்ற தோரணையே தெரிவித்தது. இரு தரப்பு வீரர்களும் அமைதி காத்தனர். துரியோதனன் யுதிஷ்டிரரையே வெறித்துப் பார்த்தவாறு அவரது அறிவிப்பைக் கேட்கக் காத்திருந்தான். யுதிஷ்டிரர் பொது அறிவிப்பை உரத்துச் சொல்லலானார்: ‘‘விரைவில் யுத்தம் தொடங்கவிருக்கிறது. இப்போது இரு தரப்பு வீரர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது.
என் அணியிலிருந்து யாரேனும் துரியோதனன் அணிக்குச் செல்வதானால் செல்லலாம். துரியோதனன் அணியிலிருந்து யாரேனும் பாண்டவர் அணிக்கு வருவதானாலும் வரலாம். எந்த அணியில் தர்ம நெறி இருக்கிறது என்று கண்டுணர்ந்து அதன் பொருட்டுத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு இது கடைசி சந்தர்ப்பம். அப்படி அணி மாறுகிறவர்கள் மேல் இரு தரப்பினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கலாகாது. அணி மாறியவர்கள் அவரவர்கள் சார்ந்த புதிய அணியின் தரப்பில் போரிடுவார்கள்.’’
இப்படி கம்பீரமாக அறிவித்து விட்டு யுதிஷ்டிரர் சற்று நேரம் அமைதியாய் காத்திருந்தார். அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் யுதிஷ்டிரரின் அறிவிப்பைக் கேட்டு வியந்தார்கள். தர்மபுத்திரரின் அறிவிப்பு அவரது உயர்ந்த பண்பாட்டைப் புலப்படுத்துகிறது. ஆனால், இந்தக் கடைசி சந்தர்ப்பத்தில் யாரேனும் கட்சி மாறுவார்களா என்ன? யுதிஷ்டிரர் தமது மாபெரும் படையைப் பார்த்தார். யாரும் இருந்த இடத்தை விட்டு ஒரு துளி அசைவையும் காட்டவில்லை.
துரியோதனன் தரப்புப் படைவீரர்களைக் கேள்விக் குறியுடன் பார்த்தார் யுதிஷ்டிரர்.
என்ன ஆச்சரியம்! ஒரே ஒரு தேர் மட்டும் அதில் அமர்ந்திருந்த வீரனைத் தாங்கி கௌரவர் பக்கமிருந்து பாண்டவர் பக்கம் மெல்ல நகரத் தொடங்கியது!
‘‘யார் அது, நம் தரப்பிலிருந்து பாண்டவர் தரப்பிற்கு கட்சி மாறுவது?’’ துரியோதனன் உரத்த குரலில் கூச்சலிட்டான். அந்தத் தேரில் அமர்ந்திருந்த வீரனை நோக்கி அம்பெய்யவும் முற்பட்டான். பாண்டவர் அணிக்குச் செல்லும் வீரனை தொலைவிலிருந்தே உற்றுப் பார்த்தார் பீஷ்மர். கவசங்களால் உடல் மறைக்கப்பட்டு ஒரே மாதிரி உடை அணிந்த நிலையில் எல்லா வீரர்களும் ஏறக்குறைய ஒன்றுபோல்தான் தெரிந்தார்கள்.
என்றாலும் அவன் யார் என்பதை பீஷ்மரின் கூரிய விழிகள் கண்டுகொண்டு விட்டன. அந்த வீரனை நோக்கி துரியோதனன் வில்லை வளைத்தபோது, ‘‘துரியோதனா, சற்றுப் பொறு!’’ என்று குறுக்கிட்டார் பீஷ்மர். ‘‘அவனைப் போகவிடு. யுதிஷ்டிரன் கட்சி மாறுபவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கலாகாது என்றானே? அந்த வீரன் அவன் மனச்சாட்சிப்படி நடக்கிறான். நீ அவனை அதன் பொருட்டுக் கொல்வது சரியல்ல. உன் படை, அவன் ஒருவனை இழப்பதால் எந்த வகையிலும் வலிமை குறையப் போவதில்லை. நீ அவனை இப்போது கொல்வானேன்?
நம்மிலிருந்து வேறுபட்டுப் பாண்டவர் அணியில் சேர்ந்த வீரன், போர் தொடங்கியதும், நம் வீரர்களில் ஒருவனாலேயே கொல்லப்படுவான்! அதுவே அவனுக்கான தண்டனை!’’ பீஷ்மர் சொன்னதைக் கேட்டு துரியோதனன், அம்பைத் தன் அம்பறாத் தூணியில் செருகிக் கொண்டான். எதிரணியைச் சார்ந்த பீஷ்மரின் பேச்சைக் கேட்டு கண்ணன் முகத்தில் ஒரு புன்முறுவல் படர்ந்தது. கண்ணன் அர்ச்சுனனிடம் சொன்னான்: ‘‘பீஷ்மர் பெரும் வீரராக இருக்கலாம். ஆனால், தீர்க்க தரிசி அல்ல.’’ ‘‘ஏன் அப்படிச் சொல்கிறாய் கண்ணா?’’ ‘‘பின்னே?
இதோ நம் அணியில் சேர வருகிறானே அவன் ஒருவன்தான் போர் முடிந்த பின்னும் உயிர் பிழைத்திருக்கப் போகும் ஒரே கௌரவ வீரன். அப்படியிருக்க அவன் கொல்லப்படுவான் என்கிறாரே பீஷ்மர்? அவன் சாதாரணப் படைவீரன் அல்ல. கௌரவர்களில் ஒருவன்!’’ ‘‘என்னது! கௌரவர்கள் நூறுபேரில் அவன் ஒருவனா?’’ ‘‘அர்ச்சுனா! கௌரவர்கள் மொத்தம் நூற்றியோரு பேர். நம் அணியில் சேர வருபவன் நூற்றியோரு பேரில் ஒருவன்.’’ ‘‘வியப்பாக இருக்கிறதே! இதுவரை கௌரவர் நூறுபேர் என்றுதான் நான் அறிந்திருக்கிறேன்.’’
‘‘இந்த நூற்றியோராவது கௌரவனுக்கு கௌரவர்கள் உரிய கௌரவம் கொடுக்கவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதைப் பிறகு சொல்கிறேன். இதோ நம் அணிக்கு வரும் இவனை நீயும் அறிவாய். நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஒருமுறை பீமனுக்கு துரியோதனன் நீரில் நஞ்சு கலந்து கொடுக்க முற்பட்டானே, அப்போது அதை முன்கூட்டியே பீமனுக்குத் தெரிவித்து பீமன் உயிரைக் காத்தவன் இவன்தான். தர்மநெறியிலிருந்து ஒரு சிறிதும் மாறாமல் இருப்பவன். தர்மத்தை விடாமல் அனுசரிப்பவர்களுக்கு என்றும் என் துணை உண்டு.
இவனது உயிரை இறுதிவரை நான் காப்பேன். இவன் உயிரை நான் காப்பதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதையும் இன்றைய போர் முடிந்த பிறகு சாவகாசமாகச் சொல்கிறேன். யுத்தம் தொடங்கவிருக்கிறது அர்ச்சுனா! நான் தேரைச் செலுத்தப் போகிறேன். நீ காண்டீபத்தை எடுத்துக்கொண்டு தயாராகு.’’ கண்ணன் தேர்க் குதிரைகளின் லகானைப் பற்றி அதைச் சொடுக்கத் தயாரானான். தங்கள் அணிக்கு வந்துசேர்ந்த கௌரவனைப் பற்றிய நினைப்பு அர்ச்சுனன் மனத்திலிருந்து முற்றிலும் விலகியது.
அவன் போரிடத் தயாரானான்... சூரியன் அஸ்தமனம் ஆனதும் முதல்நாள் போர் அவ்வளவில் முடிவடைந்தது. மறுநாள் காலை போரில் மீண்டும் சந்திப்போம் என்று முழக்கமிட்டு, கௌரவர்களும், பாண்டவர்களும் அவரவர் பாசறைக்குத் திரும்பினார்கள். பாண்டவர் அணியில் புதிதாய்ச் சேர்ந்த கௌரவ வீரனைத் தன்னுடன் அணைத்து அழைத்துக் கொண்டு பாண்டவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான் ஸ்ரீகிருஷ்ணன். பஞ்ச பாண்டவர்கள் மட்டுமல்ல, அங்கே பாஞ்சாலியும், குந்திதேவியும் கூட அமர்ந்திருந்தார்கள்.
யுத்தம் எத்தனை நாள் நீடிக்குமோ என்ற கவலை குந்தியின் மனத்தில் படர்ந்திருந்ததை அவள் முகம் தெரிவித்தது. தலைவிரி கோலமாக அமர்ந்திருந்த பாஞ்சாலியின் கண்கள், துச்சாதனன் மேலும் துரியோதனன் மேலும் கொண்ட தாளாத கோபத்தால் சிவப்பேறியிருந்தன. ‘‘கண்ணா! வா வா!’’ என்று கண்ணனைப் பரவசத்தோடு வரவேற்றாள் குந்திதேவி. பாஞ்சாலியும் கண்ணனைப் பாசம் பொங்க அழைத்தாள். கண்ணனையே சரணடைந்து வாழ்ந்த பாண்டவர்கள் கண்ணனுக்கு ஆசனம் அளித்து அமர வைத்தார்கள். தன்னுடன் வந்த கௌரவ வீரனைப் பிரியமாகத் தன் பக்கத்தில் இருத்திக் கொண்டான் கண்ணபிரான்.
குந்தி, கண்ணன் அழைத்து வந்த இளைஞனை ஆராய்ந்தாள். வசீகரமான தோற்றம். நற்குணங்களையே கடைப்பிடிப்பதால் வந்த பொலிவு அவன் முகத்தை மேலும் அழகாக்கியிருந்தது. கண்ணனே அழைத்து வந்திருப்பதால் மிக முக்கியமானவனாகத்தான் இருக்க வேண்டும். யார் இவன்? குந்தி பார்வையாலேயே கேள்வி கேட்டாள். ‘‘இவன் கௌரவர்களில் ஒருவன்!’’ இதைக் கண்ணன் சொல்லி முடிப்பதற்குள் பாஞ்சாலியின் சிவந்த கண்கள் மேலும் கூடுதலாகச் சிவந்தன. ஆனால், அடுத்து கண்ணன் சொன்னதைக் கேட்டு அவள் அமைதியானாள்.
‘‘இவன் கௌரவர்களை விட்டு விலகி நம் அணிக்கு வந்துவிட்டான். தர்மம் எங்கிருக்கிறதோ அதை உணர்ந்து கட்சி மாற விரும்புகிறவர்கள் மாறலாம் என்ற யுதிஷ்டிரனின் அறிவிப்பைக் கேட்டு இன்று காலை நம் கட்சிக்கு மாறிவிட்டான் இவன்!’’ கண்ணன், வந்த புதியவனின் தலையை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தான். புதியவன் குந்திதேவியின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான். குந்தி அவனைப் பிரியமாய்ப் பார்த்து மனமார ஆசீர்வதித்தாள். பாஞ்சாலியின் விழிகளில் மகிழ்ச்சி தோன்றியது.
‘‘உன் பெயர் என்ன மகனே?’’ குந்தி ஆதரவுடன் கேட்டாள். அவன் கம்பீரமாக பதிலளித்தான். ‘‘தர்மநெறி பிறழாமல் வாழும் ஐந்து புதல்வர்களைப் பெற்ற பாக்கியசாலியான அன்னையே! என்னை யுயுத்சு என்று அழைப்பார்கள்!’’ யுயுத்சு! குந்தியின் மனம் அந்தப் பெயரைக் கேட்டதும் யோசனையில் ஆழ்ந்தது. ஆம். காந்தாரி இவன் பெயரை ஒருமுறை குறிப்பிட்டு இவனைப் பற்றித் தன்னிடம் அங்கலாய்த்திருக்கிறாள். ஆனால், பல காலம் முன்னால் நடந்த சம்பவம். காந்தாரி அன்று இவனைக் குறித்து அங்கலாய்த்தது ஏன் என நினைவில்லை.
ஆனாலும், காந்தாரிக்கு இவனைப் பிடிக்கவில்லை என்ற உண்மை மட்டும் இன்றும் மனத்தில் தேங்கியிருக்கிறது. அதுசரி. உண்மையில் யார் இவன்? அனைவர் கண்களும் அவனையே பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தபோது இடைவெட்டியது அர்ச்சுனன் குரல். ‘‘கண்ணா! இவன் கௌரவர்களில் ஒருவன் என்றாய். மற்ற கௌரவர்களால் இவன் உரிய மதிப்புடன் நடத்தப்படவில்லை என்றும் சொன்னாய். இப்போது சொல். இவன் சரிதம் என்ன? காந்தாரி பெற்ற கௌரவர்களில் ஒருவன் தானா இவனும்?’’‘‘இவன் கௌரவர்களில் ஒருவன், அதாவது, திருதராஷ்டிரரின் மகன்.
ஆனால், காந்தாரியின் பிள்ளை அல்ல!’’ குந்தி நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவளுக்குக் காந்தாரி இவனை ஏன் வெறுத்தாள் என்பது புரியத் தொடங்கியது. கண்ணன் மேலும் விளக்கலானான்: ‘‘காந்தாரி கர்ப்பவதியாய் இருந்தபோது அவள் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. அதனால், கண்ணில்லாத திருதராஷ்டிரருக்குப் பணிவிடை செய்ய அமர்த்தப்பட்டாள் சுகதா என்ற ஒரு பெண். அவளது பணிவிடை திருதராஷ்டிரரின் வற்புறுத்தலால் சற்று எல்லை மீறியதன் விளைவுதான் யுயுத்சு. தங்கள் தந்தைக்குப் பிறந்தவன் என்றாலும் பணிப்பெண்ணின் மகன் என்பதால் இவன் பிற கௌரவர்களால் அலட்சியமாக நடத்தப்பட்டான்.
அதோடு தர்ம நெறியிலேயே இவன் சிந்தனை சென்றதும்கூட, மற்ற கௌரவர்கள் இவனை வெறுக்கக் காரணமாயிற்று. தர்மநெறியைப் போற்றும் இவன் அதர்ம அணியில் தொடர்ந்து இருக்க விரும்பாததால் நம் அணிக்கு வந்துவிட்டான்.’’ ‘‘அதுசரி கண்ணா! எங்களைக் காப்பதுபோல இவன் உயிரையும் இறுதிவரை காப்பேன் என்றாயே? நீ அப்படிச் சொன்னதன் பின்னணி என்ன?’’ அர்ச்சுனன் கேட்டான். ‘‘அர்ச்சுனா! போரில் யுயுத்சுவைத் தவிர எஞ்சியுள்ள அத்தனை கௌரவ சகோதரர்களும் அழிக்கப்படுவார்கள். போர் முடிந்து சிறிது காலத்திற்குப் பிறகு திருதராஷ்டிரனும் காலமாவான்.
மாமன்னன் திருதராஷ்டிரன் காலமாகும்போது, அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரே ஒரு பிள்ளையாவது மிஞ்ச வேண்டாமா? இதோ இந்த யுயுத்சு தான் திருதராஷ்டிரனுக்கு இறுதிக் கடன் செய்யப் போகிற அந்த ஒரே பிள்ளை!’’ இந்தச் செய்திகளைக் கேட்டு குந்தி ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள். ‘‘கௌரவ சகோதரர்கள் நூறுபேர் அல்ல, நூற்றியோரு பேர் என்று திடீரென்று வெளிப்பட்ட இந்த உண்மை எனக்கு வியப்பாக இருக்கிறது!’’ என்றாள் அவள். அவளை பாண்டவர்கள் அனைவரும் ஆமோதித்தனர். யுதிஷ்டிரர் யுயுத்சுவை இழுத்து அணைத்துக் கொள்ள, பிற பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அவனைத் தட்டிக்கொடுத்தார்கள்.
Leave a Comment