அர்ஜுனனும் மஹாதேவரும்...
அர்ஜுனனும் மஹாதேவரும்
அர்ஜுனன் மிகச் சிறந்த வில்லாளி. ஆனால் இப்போது அவனிடமிருக்கும் அஸ்திரங்களைக் கொண்டு, கௌவுரவர்களை ஜெயிக்க முடியாது. எனவே அவன் சிவபெருமானை நினைத்து தவமிருந்து பாசுபத அஸ்திரத்தை பெற்று வர வேண்டும். பாசுபதாஸ்திரமே கௌவுரவர்களை அழிக்கும் ஒரே சாதனம்.
அதனால் அர்ஜுனன் சிவபெருமானை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தான், சிவபெருமானோ அவனுக்கு பிரத்யட்சம் ஆகவில்லை.
எதற்கும் கலங்காத அர்ஜுனன், அவர்கள் சொன்னபடி அக்னி வளர்த்து அதன் நடுவில் நின்றபடி தவம் செய்தான். சிவத்தியானத்தால் அக்னி அவனுக்கு குளிரவே செய்தது
இந்த நேரத்தில் துரியோதனன் காட்டில் இருக்கும் அர்ச்சுனனைக் கொல்வதற்காக முகாசுரன் என்பவனை ஏவிவிட்டான்.
முகாசுரன் கெடிய முள்ளம்பன்றி வடிவம் கொண்டு அர்ஜுனனை அழிக்க காத்திருந்தான்.
அவன் அர்ஜுனனைக் கொல்ல நெருங்கும் வேளையில் பார்வதிதேவியார் கருணை உள்ளத்துடன் பரமசிவனை அணுகினாள். அன்பரே ! தாங்கள், உங்கள் பக்தனின் கடும் தவத்திற்கு ஏன் இன்னும் இரங்கவில்லை ? என்றாள் தாயுள்ளத்தோடு.
பரமசிவன் சிரித்தார். தேவீ ! உன் கருணைக்கு தான் ஏது எல்லை. பக்தர்கள் துன்பப்படுவதை நீ சகிக்க மாட்டாய். அவர்கள் எந்தத் துன்பத்தையும் தாங்கும் சக்தியைப் பெற வேண்டும் என்ற பக்குவ நிலையை அடைய வேண்டும் என நான் விரும்புகிறேன்.
இனி அவனுக்கு துன்பமில்லை என்றவர் நந்தீஸ்வரனை திரும்பிப் பார்த்தார். இறைவனின் பார்வையிலேயே குறிப்பறிந்த நந்தீஸ்வரர் தன் கணங்களுடன் தயாராகி விட்டார்.
பார்வதியிடம், நான் வேடனாக வேடம் கொள்கிறேன். நீ வேடுவச்சியாக வேடம் தரித்து வா! மற்றவர்களும் வேடர் கோலம் பூணுங்கள். வேதங்களே! நீங்கள் நாய் வடிவில் என்னைத் தொடருங்கள், என உத்தரவிட்டார். கணநேரத்தில் எல்லாம் முடிந்தது. அவர்கள் முகாசுரனை அழிக்க புறப்பட்டனர்.
சிவபெருமான் அவன் இருந்த இடத்தை அடைந்து, வில்லில் அம்பைப் பொருத்தி காத்திருந்தார். முகாசுரன் பயங்கர உறுமலுடன் அர்ஜுனனை நெருங்கினான். அதுகேட்டு, அர்ஜுனனின் நிஷ்டை கலைந்துவிட்டது. தனது வில்லில் அம்புதொடுத்து பன்றியின் மீது எய்தான். அதே நேரத்தில் மறைந்திருந்த சிவபெருமானும் ஒரு அம்பை பன்றியின் பின்பக்கமாக விட இரண்டும் ஒன்றாய் தைத்தன. முகாசுரன் இறந்தான்.
அப்போது சிவகணங்களாக வந்த வேடர்கள், அடேய் வாலிபனே! இந்த மலையில் பல்லாண்டுகளாய் வசிக்கும் எங்கள் குலத்தலைவர் பன்றிக்கு குறி வைத்திருக்க, எங்கிருந்தோ வந்த நீயும் பன்றியை அடித்தாயே! இது முறையா? என வம்புச்சண்டைக்கு இழுத்தனர்.
அர்ஜுனன் அவர்களது தலைவனாய் வந்திருக்கும் சிவபெருமானை நோக்கிச்சென்று, அவர் சிவன் என்பதை அறியாமல், வேடர் தலைவா! நீ விட்ட அம்பு பின்பக்கமாக விடப்பட்டது. ஆனால் நான் அதன் முகத்துக்கு நேராக அம்பெய்தி கொன்றேன். என் அம்பு துளைத்த பிறகு தான் உனது அம்பு அதன் மீது பாய்ந்தது. இதை தவறாகச் சொல்கின்றார்களே உன் வீரர்கள் ! போகட்டும். நான் கடும் தவம் மேற்கொண்டுள்ளேன். நான் காய்ந்த இலைகளை மட்டுமே உணவாகக் கொண்டு விரதமிருக்கிறேன். இந்தப் பன்றி எனக்குத் தேவையில்லை. இதை நீங்களே எடுத்துச் சென்று சாப்பிடுங்கள் என்றான்.
உடனே சிவபெருமான், இதோ! நீ உண்மையிலேயே வலிமை உள்ளவன் என்னை ஜெயித்துப் பார். வா சண்டைக்கு! என்றார்.
அர்ஜுனன் சற்றும் யோசிக்காமல், ஒரு அம்பை சிவன் மீது விட்டான். இப்படியாக போர் துவங்க அர்ஜுனனின் கணைகளால் சிவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவன் ஆச்சரியமும் கோபமடைந்தான். சிறிது நேரம் தளர்ந்தும் தெம்பானான்.
அவனது கால்கள் நடுங்கின. சிவபெருமான் கடைசியாக தனது அம்பு ஒன்றை வீசி, அர்ஜுனனின் வில் நாணையே அறுத்து விட்டார். . பின்னர் இருவரும் மல்யுத்தம் செய்தனர். அதிலும் இருவரும் விடாக்கண்டர்களாக இருந்தனர். சிவன் அர்ஜுனனை தூக்கி வானில் எறிந்தார். இது கண்ட தேவர்கள் வானில் இருந்து வந்து மலர் தூவ, சிவபெருமான் அர்த்தநாரீஸ்வர வடிவில் ரிஷபத்தின் மீது காட்சி தந்தார்.
எந்தையே! தாங்களா இந்த சிறுவனுடன் போரிட்டது! என்னால் நம்ப முடியவில்லை!நான் பிறந்த பயனை அடைந்து விட்டேன், என்று பல நாமங்கள் சொல்லி அவரை பூஜித்தான் அர்ஜுனன். சிவபெருமான் மகிழ்ந்து, அர்ஜுனா! நீ விரும்பியது போல பாசுபதாஸ்திரம் தருகிறேன் எனச் சொல்லி அதைக் கொடுத்தார்.
mikuthi enkey
ReplyDeletemikuthi enkey
ReplyDelete